இந்திய – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: உலகளாவிய சந்தையும் தமிழகத்தின் புதிய சவால்களும்

பிப்ரவரி 2026.

சுமார் இருபது ஆண்டுகால இழுபறிக்குப் பிறகு, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) எட்டியுள்ள இந்தத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA), வெறும் எண்களிலான வணிக உடன்படிக்கை மட்டுமல்ல. இது ‘சீனா + 1’ எனும் உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றத்தில் (Supply Chain Change), இந்தியா தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு முக்கியமான நகர்வு.

குறிப்பாக, கோவை மற்றும் திருப்பூர் போன்ற ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் தமிழகத் தொழில் மண்டலங்களுக்கு, இந்த ஒப்பந்தம் ஒரு புதிய வாய்ப்பையும், அதே சமயம் ஒரு நுணுக்கமான எச்சரிக்கையையும் ஒருசேரக் கொண்டு வந்துள்ளது.

India-EU Free Trade Agreement 2026 - A detailed analysis for Tamil Nadu MSMEs

ஒரு நீண்ட காத்திருப்பின் புவிசார் அரசியல் பின்னணி

2007-ல் தொடங்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏன் இவ்வளவு காலம் தேங்கி நின்றன என்பது ஒரு சுவாரஸ்யமான அரசியல்-பொருளாதார விவாதம். பால் உற்பத்தி, மதுபானங்களுக்கான வரி மற்றும் தரவுப் பாதுகாப்பு (Data Privacy) என பல விவகாரங்களில் இரு தரப்புக்கும் நீண்ட காலம் முரண்பாடுகள்  நீடித்தன.

ஆனால், உக்ரைன் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு (World Order) மற்றும் ஐரோப்பா தனது எரிசக்தி மற்றும் விநியோகத் தேவைகளுக்கு ரஷ்யா மற்றும் சீனாவைத் தாண்டி வேறு ஒரு வலுவான ஜனநாயக நாட்டைத் தேட வேண்டிய கட்டாயம், முரண்பாடுகள் கடந்து இந்தியாவை நோக்கிய இந்தப் பயணத்தை EU செய்தது. இன்று 2026-ல், தெற்காசிய வர்த்தக வரைபடத்தில் இந்தியா வர்த்தகத்தில் ஒரு புதிய மையமாக உருவெடுத்துள்ளது.

ஜவுளி மற்றும் பொறியியல்: திருப்பூருக்கும் கோவைக்கும் கிடைக்கும் ‘பூஜ்ஜிய வரி’ சலுகை

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் தொழில்முனைவோரின் நீண்டகால ஆதங்கம், வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஐரோப்பியச் சந்தையில் கிடைக்கும் ‘பூஜ்ஜிய வரி’ (Zero Duty) சலுகை இந்தியாவிற்கு இல்லை என்பதுதான்.

தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம், இந்தியப் பின்னலாடைகள் மற்றும் பொறியியல் உதிரிபாகங்கள் மீதான 9% முதல் 12% வரையிலான இறக்குமதி வரிகள் நீக்கப்படவுள்ளன. இது சர்வதேசச் சந்தையில் நமது பொருட்களின் விலையை (Price Competitiveness) நேரடியாகக் குறைக்கும். கோவையின் தொழிற்சாலைகளில் தயாராகும் வால்வுகள் (Valves) மற்றும் மோட்டார்கள் இனி ஜெர்மனி அல்லது இத்தாலியத் தயாரிப்புகளுக்கு இணையான விலையில் ஐரோப்பியத் தொழிற்சாலைகளுக்குக் கிடைக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

பசுமைத் தடையரண்: கார்பன் வரியும் நிலைத்தன்மை விதிகளும்

வரிச் சலுகைகள் ஒரு கதவைத் திறக்கின்றன என்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கடுமையான தரக்கட்டுப்பாடுகள்’ மற்றொரு சவாலை முன்வைக்கின்றன. இங்கேதான் இந்திய MSME-கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஐரோப்பாவின் ‘கரிம வரி எல்லை மேலாண்மை திட்டம்’ (CBAM – Carbon Border Adjustment Mechanism) என்பது வெறும் சுற்றுச்சூழல் விதி அல்ல; அது ஒரு மறைமுகமான வர்த்தகத் தடை (Non-Tariff Barrier). அதாவது, உங்கள் பொருளைத் தயாரிக்கும்போது எவ்வளவு கார்பன் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கணக்கிட்டு, அதற்கு ஒரு வரி விதிக்கப்படும்.

கோவையின் ஃபவுண்டரிகள் (Foundries) மற்றும் திருப்பூரின் சாயப்பட்டறைகள் இனி வெறும் ‘லாபத்தை’ மட்டும் இலக்காகக் கொள்ள முடியாது. ‘பசுமைத் தயாரிப்பு’ (Green Manufacturing) என்பது இனி ஒரு கூடுதல் தகுதி அல்ல; அது பிழைப்பதற்கான ஒரே வழி.

தொழில்நுட்ப இறக்குமதியும் நவீனமயமாக்கலும்

இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மட்டும் பயன் தருவது அல்ல. ஐரோப்பாவின் அதிநவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறைந்த இறக்குமதி வரியில் இந்தியாவிற்குள் நுழையும். இது கோயம்புத்தூரின் பொறியியல் தொழிலுக்கு பெரிய நன்மையே.

ஜெர்மனி மற்றும் இத்தாலியின் துல்லியமான இயந்திரங்கள் (Precision Machinery) மலிவான விலையில் கிடைக்கும்போது, கோவையின் ‘பிரிசிஷன் இன்ஜினியரிங்’ துறை உலகத் தரத்திற்குத் தன்னை உயர்த்திக்கொள்ள முடியும். இது வெறும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இடமாக இருந்த கோவையை, ஒரு ‘Innovation Hub’-ஆக மாற்றும் ஆற்றல் கொண்டது.

மேலும் படிக்க:  GeM Portal-ல் பதிவு செய்வது எப்படி ?

வாய்ப்புகளை வசப்படுத்துதல்

இந்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்; ஆனால், சந்தையை வெல்வது என்பது தொழில்முனைவோரின் கைகளிலேயே இருக்கிறது. ஐரோப்பியச் சந்தை என்பது தரத்திற்கும் (Quality), தொழிலாளர் நலனுக்கும் (Social Compliance), சுற்றுச்சூழலுக்கும் உச்சகட்ட முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தளம்.

2026-ன் இந்த புதிய வணிகச் சூழலில், நாம் வெறும் ‘குறைந்த உழைப்புச் செலவு’ (Low Labor Cost) கொண்ட நாடாக மட்டும் நீடிக்க முடியாது. மாறாக, ‘உயர்தர மற்றும் நிலையான உற்பத்தி’ (High Quality & Sustainable Production) கொண்ட நாடாக மாற வேண்டும்.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒரு ஜன்னல். அந்த ஜன்னல் வழியாக வரும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, நம் தமிழகத் தொழில்துறையை உலகத் தரத்திற்கு ஒளிரச் செய்வோமா என்பது நமது அடுத்தகட்ட நகர்விலேயே உள்ளது.